பெற்றோருடன் டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்ய கந்து வட்டி கொடுமை காரணமா? போலீஸ் விசாரணை

பெற்றோருடன் டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்து கொள்ள தூண்டியவர்கள் யார்? என்று அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-05 00:00 GMT

கோவை,

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வைரமுத்து (வயது 29). டிராவல்ஸ் அதிபர்.

அவருடைய தந்தை பாலமுருகன்(55), தாய் லட்சுமி(42) ஆகியோரும் அவருடன் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் வீட்டில் இறந்து கிடந்தனர். வைரமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பெற்றோர் கை நரம்புகள் அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திருப்பூரில் உள்ள உறவினருக்கு வைரமுத்து கூரியர் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தின் மூலமே தற்கொலை விவரம் தெரியவந்தது. வைரமுத்து எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

வைரமுத்துவுக்கு லட்சக்கணக்கில் கடன் இருந்துள்ளது. கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் வைர முத்து திணறி வந்துள்ளார். எனவே அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று 3 பேரும் வி‌ஷம் குடித்துள்ளனர்.

பின்னர் 3 பேரும் கை நரம்புகளை கத்தியால் அறுத்து, ஆழமாக குத்தி உள்ளனர். இதில் பால முருகன், லட்சுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னரும் உயிரோடு இருந்த வைரமுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இவர்கள் தற்கொலை செய்யும் முன் செல்போனில் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளனர். அதிலும் தற்கொலைக்கான காரணத்தை கூறி உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

வைரமுத்து எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

‘நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் நேரம் என்னை மிகப்பெரிய தவறு செய்ய வைத்து விட்டது. எனக்கு இந்த முடிவை எடுப்பதை தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை. கடனில் இருந்து மீள முடியாமல் இந்த முடிவை எடுக்கிறேன். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் அவர்களையும் அழைத்து செல்கிறேன்.

நான் வெற்று பத்திரத்தில் நிறைய பேருக்கு கையெழுத்து போட்டுகொடுத்துள்ளேன். அதை வைத்துக் கொண்டு எனது உறவினர்கள் யாரிடமும் பணம் கேட்க கூடாது. மோட்டார் சைக்கிள் வாகனங்கள், வீடு ஆகியவற்றை விற்று பணத்தை ‘செட்டில்’ செய்து கொள்ளுங்கள். அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள்’.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரமுத்து எழுதிய கடிதத்தில் சிலரது பெயர்களை குறிப்பிட்டுள்ளார். அவர் யார்–யாரிடம் கடன் வாங்கினார்? வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் யார்–யார்? அவர்கள் கந்து வட்டி கேட்டு வைரமுத்துவை கொடுமை படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேரின் உடல்களும் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்