கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கார்களில் கடத்திய ஹவாலா பணம் பறிமுதல், 2 பேர் கைது

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கார்களில் கடத்திய ரூ.2 கோடியே 44 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-04 23:15 GMT

கூடலூர்,

கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் இணையும் தமிழக பகுதி கூடலூர் ஆகும். இங்கு முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் கேரளாவின் முத்தங்கா சரணாலயம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் இருக்கிறது. மைசூருவில் இருந்து முத்தங்கா சரணாலயம் வழியாக சுல்தான்பத்தேரி, பந்திப்பூர் மற்றும் முதுமலை வழியாக கூடலூர், ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் காரணமாக எல்லைகளில் கேரள–தமிழக போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து முத்தங்கா சரணாலயம் வழியாக கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக வயநாடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்புதீன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் 2 மணிக்கு முத்தங்கா சரணாலயம் அருகில் உள்ள பொன்குழி என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளா நோக்கி 2 கார்கள் வந்தன. உடனே அந்த கார்களை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 2 கார்களிலும் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த அறைகளை திறந்து பார்த்தபோது, அதில் மொத்தம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 70 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 கார்களின் டிரைவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளியை சேர்ந்த அப்துல் லதீப்(வயது 41), ஜெய்சன்(31) ஆகியோர் என்பதும், பறிமுதல் செய்யப்பட்டது கணக்கில் வராத ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்