மாவட்ட செய்திகள்
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். கிராம மக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செஞ்சி, 


செஞ்சி அருகே உள்ள மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சி-திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தை சேர்ந்த தாமோதரன் மகன் தர்மலிங்கம்(29) என்பவர் செஞ்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந் தார். ராஜாம்புலியூர் என்ற இடத்தில் இருவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தர்மலிங்கம் பலியானார். படுகாயமடைந்த முருகன், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே ராஜாம்புலியூர் கிராம மக்கள் செஞ்சி -திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோதண்டம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட சாலை விரிவாக்க பணியால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அந்த பணியை மீண்டும் தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் செஞ்சி-திண்டிவனம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலியான தர்மலிங்கம், செஞ்சி அருகே ரெட்டிப்பாளையத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.