ரூபாய் நோட்டுகளை கீழே சிதறவிட்டு கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சம் திருட்டு

திருச்சியில் ரூபாய் நோட்டுகளை கீழே சிதறவிட்டு கவனத்தை திசை திருப்பி, ஓய்வு பெற்ற மாநகராட்சி அதிகாரியிடம் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-04 22:15 GMT

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் ரெங்கா நகரை சேர்ந்தவர் சேகர் (வயது58). இவர் மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நேற்று முன்தினம் உறையூர் ராமலிங்கநகரில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்தை தனது கணக்கில் இருந்து எடுத்தார். அந்த பணத்தை ஒரு பையில் போட்டு மொபட்டில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் முன்பு வந்ததும் மொபட்டை நிறுத்திவிட்டு சாவியை போட்டு இருக்கையின் கீழ் பகுதியை திறக்க முயன்றார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். மற்றொரு நபர் நடந்து வந்தார். சாலையில் ரூ.100, ரூ.20 நோட்டுகள் சிதறி கிடப்பதாகவும், அந்த நோட்டுகள் உங்களுடையதா? என நடந்து வந்த வாலிபர் சேகரிடம் கேட்டார். இதனை கேட்ட அவர் மொபட்டில் சாவியை வைத்து விட்டு கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க சென்றார்.

அந்த நேரத்தில் மர்ம நபர்கள், சேகரின் மொபட்டில் அவர் வைத்து சென்ற சாவி மூலம் பெட்டியை திறந்து அதில் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். சேகர் கீழே கிடந்த ஒரு சில ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு தனது மொபட்டின் அருகே வந்த போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் காணாதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மர்மநபர்கள், கீழே ரூபாய் நோட்டுகளை சிதற விட்டு கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வங்கியில் சேகர் பணத்தை எடுத்தது முதல் அவர் வீட்டிற்கு மொபட்டில் வரும் வரை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் காட்சிகள் தெளிவாக இல்லாதது தெரிந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்