விற்பனையாளரை இடமாற்றம் செய்யக்கோரி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டி ரேஷன் கடை விற்பனையாளரை பணி இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-09-04 22:26 GMT
சேந்தமங்கலம், 


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த கண்ணகி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முறைகேடு புகார் தொடர்பாக கொண்டமநாயக்கன்பட்டி ரேஷன் கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை மீண்டும் வடுகப்பட்டி ரேஷன்கடைக்கு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தனர்.

இதனிடையே அப்பகுதி மக்கள், கண்ணகியை மீண்டும் வடுகப்பட்டி ரேஷன் கடையில் பணி அமர்த்தக்கூடாது என்றும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், எனவே அவர் தொடர்ந்து தங்கள் பகுதியில் பணியாற்றக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு விற்பனையாளரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடிமைப்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் சேந்தமங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் விற்பனையாளரை பணியிட மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்