நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் கலெக்டர் ஷில்பா அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.

Update: 2018-09-05 21:00 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

விநாயகர் சதுர்த்தி விழா

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியின் போது களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விட்டு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் சிலர் ரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள். அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13–ந் தேதி கொண்டாடப்படுகிறது. ரசாயன கலவை கலந்த விநாயகர் சிலைகளை தயார் செய்யக்கூடாது. இந்த சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. களிமண்ணால் ஆன சிலைகளை மட்டும் தயார் செய்ய வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கரைக்கும் இடங்கள்

நெல்லை மாநகர பகுதியில் உள்ள சிலைகள் தாமிரபரணி ஆறு, குறிச்சி, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில், மணிமூர்த்தீஸ்வரம் ஆகிய இடங்களில் கரைக்க வேண்டும்.

செங்கோட்டை– குண்டாறு, அச்சன்புதூர்–அனுமன் ஆறு, ஊத்துமலை– பாபநாசம் தாமிரபரணி ஆறு, ஆலங்குளம்– பாபநாசம் தாமிரபரணி ஆறு, வாசுதேவநல்லூர், சிவகிரி– ராயகிரி பிள்ளையார் மந்தை ஆறு, கடையநல்லூர்– மேல கடையநல்லூர் குளம், திருவேங்கடம்– வேம்பார் கடற்கரை ஆகிய இடங்களில் கரைக்க வேண்டும்.

திசையன்விளை, நாங்குநேரி, திருக்குறுங்குடி, களக்காடு, மூன்றடைப்பு, பழவூர், ராதாபுரம், பணகுடி, விஜயநாராயணம், வள்ளியூர் ஆகிய பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் உவரி கடற்கரையில் கரைக்க வேண்டும்.

நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு, சுரண்டை ஆகிய இடங்களில் தயார் செய்யும் சிலைகள் பாபநாசம் தாமிரபரணி ஆற்று பகுதியில் கரைக்க வேண்டும்.

முன்னீர்பள்ளம், பாளையங்கோட்டை– சிவன்கோவில் குளம், வீரவநல்லூர், திருப்புடைமருதூர், பாவூர்சத்திரம் ஆகிய பகுதியில் பிரதிஷ்டை செய்யும் சிலைகள் பாவூர்சத்திரம் குளம், திப்பணம்பட்டி குளம் ஆகிய இடங்களில் கரைக்க வேண்டும்.

சங்கரன்கோவில்– தாமிரபரணி ஆறு, கல்லிடைக்குறிச்சி– தாமிரபரணி ஆறு, அம்பை– பாபநாசம் தாமிரபரணி ஆறு ஆகிய இடங்களில் கரைக்க வேண்டும்.

மேற்கண்ட இடங்களை தவிர வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது. மேலும் சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு தயார் செய்யப்பட்டது என நெல்லை மாவட்ட நிர்வாகத்திடம் சுய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்