அரசு பள்ளிகளை காக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்லும் விழிப்புணர்வு பிரசார வாகனத்துக்கு வரவேற்பு

அரசு பள்ளிகளை காக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்லும் இந்திய மாணவர் சங்க விழிப்புணர்வு பிரசார வாகனத்துக்கு தஞ்சையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-09-05 22:45 GMT
தஞ்சாவூர்,

இந்திய மாணவர் சங்கம் சார்பில் இமாச்சலபிரதேச மாநிலத்தில் அகில இந்திய மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 30–ந்தேதி தொடங்கி நவம்பர் 2–ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து உயர்கல்வியை சீரழிக்கக்கூடாது.

அரசு பள்ளிகளை மூடாமல் காக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அரசாணை 92–ஐ முழுமையாக அமல்படுத்தி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொள்ளும் எம்.பில் மற்றும் பி.எச்டி மாணவர்களுக்கு ஆய்வு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.


இந்த மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார வாகனம் இந்தியா முழுவதும் வலம் வருகிறது. இந்த பிரசார வாகனம் கடந்த 3–ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி வருகிற 16–ந்தேதி காஷ்மீரில் நிறைவடைகிறது. இந்த பிரசார விழிப்புணர்வு வாகனம் நேற்று தஞ்சை வந்தது.

இந்த பிரசார வாகனத்தில் அகில இந்திய தலைவர் ஷானு, துணைத்தலைவர் உச்சிமாகாளி, மாநில செயலாளர்கள் கண்ணன், மாரியப்பன், துணை செயலாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் வந்தனர்.


தஞ்சை வந்த இந்த குழுவுக்கு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி கல்லூரி அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமையில் துணை செயலாளர் பிடல்காஸ்ட்ரோ மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்றனர். பின்னர் பிரசார வாகனம் திருவாரூர் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்