மணலி அருகே கன்டெய்னர் லாரி டிரைவரை மிரட்டி செல்போன் பறிப்பு; 4 பேர் கைது

துறைமுகத்திற்கு செல்ல காத்திருந்த கன்டெய்னர் லாரி டிரைவரை மிரட்டி செல்போனை பறித்து சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பியவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

Update: 2018-09-05 23:00 GMT
திருவொற்றியூர்

எண்ணூர் மணலி விரைவு சாலையில் சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகே சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் ஐயப்பன்(வயது 32) வரிசையில் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் டிரைவர் ஐயப்பனை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். உடனே இதுபற்றி அங்கு நின்ற போக்குவரத்து போலீசாரிடம் டிரைவர் ஐயப்பன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீசார் தங்களது வாகனங்களில் 4 வாலிபர்களையும் துரத்திச்சென்று எம்.எப்.எல் ரவுண்டானா அருகே மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேரையும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ‘அவர்கள் திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையத்தைச்சேர்ந்த சந்தோஷ் (வயது 22), நடராஜ் தோட்டம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20), அதே தெருவை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியரான சீனிவாசன்(21) மற்றும் அம்சா தோட்டத்தை சேர்ந்த மதன் (18) ஆகிய 4 பேரும் டிரைவரிடம் செல்போனை பறித்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்