மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் நிறுவ சாமி சிலைகள் வந்தன

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் நிறுவுவதற்கான சாமி சிலைகள் வந்தன.
கன்னியாகுமரி,

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.24 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட திருமலை திருப்பதி ே-்தவஸ்தான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக விவேகானந்த கேந்திரம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. அதன்பிறகு கோவில் கட்டுமானபணி தொடங்கியது. இந்த கோவில் 2 தளமாக கட்டப்பட்டு உள்ளது. கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம், அலுவலகம் போன்றவைகளும் மேல்தளத்தில் ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடபகவான் சன்னதிகளும் சுவாமிக்கு பிரசாதம் தயாரிப்பதற்கான மடப்பள்ளியும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் நிறுவப்பட உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி சிலை 7½ அடி உயரத்திலும் பத்மாவதிதாயார், ஆண்டாள் ஆகியோருக்கு 3 அடி உயரத்திலும், 2 துவாரக பாலர் சிலைகள் தலா 6½ அடி, கருடபகவானுக்கு 3¼ அடி உயர சிலைகள் வடிவமைக்கும் பணி திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான சிற்ப கலை கல்லூரியில் நடைபெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து கோவிலில் தேக்கு மரத்தாலான 40 அடி உயர புதிய கொடிமரம் தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் விவேகானந்த கேந்திராவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கொடிமரம் விரைவில் வடிவமைக்கப்பட்டு கோவில் மேல் தளத்தில் நிறுவப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான சிற்ப கலைக் கல்லூரி யில் வடிவமைக்கப்பட்ட அனைத்து சிலைகளும் திருப்பதியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் கன்னியாகுமரிக்கு நேற்று அதிகாலை கொண்டுவரப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் ராட்சத கிரேன் மூலம் லாரியில் இருந்து இறக்கப்பட்டு கோவில் மூலஸ்தான கருவறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைகளை ஏராளமான பக்தர்களும் சுற்றுலாபயணிகளும் வந்து பார்த்து செல்கிறார்கள்.