ஆதிதிராவிட மாணவர் விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம்

ஜோலார்பேட்டையில் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி காப்பாளரை பணியிடை நீக்கம் செய்து சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-09-05 21:45 GMT
ஜோலார்பேட்டை,


ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியில் பொட்டிகான்பள்ளம் செல்லும் சாலையில் அரசு ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி உள்ளது. அந்த விடுதியில் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஜவ்வாதுமலை புதூர்நாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதி காப்பாளராக ஆம்பூரைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் விடுதியில் தரமில்லாத உணவு வழங்குவதாகவும், விடுதி வளாகம் சுத்தமில்லாமல் சுகாதார சீர்கேடாக இருப்பதாகவும், மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், கூடுதல் மாணவர்களை சேர்த்து அவர்களிடம் விடுதி காப்பாளர் பணம் வசூல் செய்வதாகவும் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்காவுக்கு புகார் வந்தது.

சப்-கலெக்டர் பிரியங்கா சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்த அறையில் அமர்ந்திருந்தனர். சமையல் அறையில் ஆய்வு செய்தபோது, அங்கு காலையில் தயாரித்த உணவையே 3 வேளைகளுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது தெரிந்தது.

மேலும் மாணவர்களை கூடுதலாக சேர்த்து அவர்களிடம் விடுதி காப்பாளர் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை வசூல் செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விடுதி காப்பாளர் பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்து, அதற்கான உத்தரவை சப்-கலெக்டர் பிரியங்கா வழங்கினார்.

ஆய்வின்போது ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் விசாலாட்சி, ஆதிதிராவிட நல தாசில்தார் குமரேசன், சுகாதார ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்