தொழில் நிறுவனங்கள் குப்பையை தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும் - ஆணையாளர் அறிவிப்பு

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் குப்பையை தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Update: 2018-09-05 23:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 100 கிலோ குப்பைகள் உருவாகும் நிறுவனங்கள், உணவு விடுதிகள், பிற நிறுவனங்கள், அலுவலகங்கள், விடுதிகள் மற்றும் 5 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட குடியிருப்பு வளாகங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தங்கள் வளாகத்தில் உரமாகவோ அல்லது உயிரி வாயுவாக உற்பத்தி செய்ய வேண்டும்.

இல்லையென்றால் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பை சேகரிப்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சிவகுமார் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தினமும் 100 கிலோ குப்பைகள் உருவாகும் தொழில் நிறுவனங்கள், உணவு விடுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 15-ந் தேதிக்குள் குப்பைகளை மேற்குறிப்பிட்டபடி மேலாண்மை செய்ய வேண்டும். மேலும் குப்பையை தரம் பிரித்து வழங்கி திருப்பூர் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்தினார். தவறுபட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் மாநகர் நல அதிகாரி பூபதி, மண்டல உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்