காவல்துறையின் 58-வது மாநில விளையாட்டு போட்டி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தொடங்கி வைத்தார்

காவல்துறையின் 58-வது மாநில விளையாட்டு போட்டியை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜூ தொடங்கி வைத்தார். இதில் 615 பேர் பங்கேற்றனர்.

Update: 2018-09-06 22:45 GMT
திருச்சி,

தமிழக காவல்துறை சார்பில் 58-வது மாநில விளையாட்டு போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த விளையாட்டு போட்டி நாளை(சனிக் கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழக காவல்துறையை சேர்ந்த ஆயுதப்படை, மத்திய மண்டலம், வடக்கு மண்டலம், கமாண்டோ படைப் பிரிவு, தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், சென்னை மாநகரம் ஆகிய 7 அணிகள் பங்கேற்றன. போட்டியின் தொடக்க விழா அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ தலைமை தாங்கி, வண்ண பலூன்களை பறக்கவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கடந்த ஆண்டு காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டியை மேற்கு மண்டலம் நடத்தியது. இந்த ஆண்டு மத்திய மண்டலம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் முழுமனதுடன் விளையாட வேண்டும். கடந்த ஆண்டு நடந்த போட்டியில் சென்னை மாநகர காவல் அணி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு மண்டல அணிகள் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருதுகிறோம்“ என்றார்.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் போலீஸ் சூப்பிரண்டுகள் அபினவ்குமார்(அரியலூர்), திஷாமிட்டல்(பெரம்பலூர்), செல்வராஜ்(புதுக்கோட்டை), தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம்அணி தளவாய் உமையாள், துணை கமிஷனர்கள் நிஷா, மயில் வாகனன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கையெறிபந்து, கபடி ஆகிய 5 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

459 வீரர்களும், 156 வீராங்கனைகளும் என மொத்தம் 615 பேர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பு மேடையில் இருந்தபடி போலீஸ் ஐ.ஜி., கமிஷனர், டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் புறாக்களை வானில் பறக்கவிட்டனர். அப்போது கமிஷனர் அமல்ராஜ் பறக்கவிட்ட புறா பறக்காமல் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மீது தலையில் அமர்ந்து கொண்டது. பின்னர் அந்த புறாவை தூக்கி மீண்டும் பறக்கவிட்டனர். இதேபோல் வீரர் மற்றும் வீராங்கனைகளின் அணி வகுப்பு ஒத்திகையும் நடந்தது.

மேலும் செய்திகள்