மாவட்ட செய்திகள்
திருப்பூரில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், திருப்பூரில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடந்தது.
திருப்பூர், 


திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சீராக குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்திடவும், மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் மற்றும் தரைமட்ட தொட்டிகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் தனிநபர் இல்ல கழிவறை பயனாளிகளுக்கு கட்டுமான நிலையின் அடிப்படையில் மானியத்தொகை நிலுவையின்றி உடனடியாக அதிகாரிகள் வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்.

இதுபோல் கிராம இணைப்பு சாலை பணிகளை விரைந்து முடித்து, கழிவுநீர் வசதிகளை சீராக செய்து பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், வேலை அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் பணி வழங்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.