என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-09-07 00:02 GMT
மதுரை, 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பிச்சம்பட்டியை சேர்ந்த வினோத்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் பி.இ., எம்.பி.ஏ., முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு இணையதளம் ஒன்றின் இ-மெயில் முகவரிக்கு எனது பயோடேட்டாவை அனுப்பினேன். மறுநாள் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதவி நிர்வாகி பணி இருப்பதாகவும், இதுகுறித்து சமீர் சவுத்ரி என்பவரிடம் பேசுங்கள் என்று எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்டது. அவரிடம் பேசினேன். பின்னர் கபீர் சர்மா என்பவர் அனுப்பிய இ-மெயிலில் எனக்கு பணி வழங்குவதற்கு உடனடியாக ஒரு வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் செலுத்துமாறு கூறினார்.
அதன்படி சிங்கப்பூர் வேலைக்காக நான் 2.5.2017 முதல் 6.6.2017 வரை பல்வேறு தவணைகளில் கபீர் சர்மா கூறிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் மொத்தம் ரூ.28 லட்சத்து 29 ஆயிரத்து 400-ஐ அனுப்பினேன்.

இதையடுத்து தனியார் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 4 ஆயிரத்து 50-ஐ அனுப்பினேன். ஆனாலும் எனக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை வாங்கித்தரவில்லை. இந்தநிலையில் மீண்டும் ஆன்லைனில் பணம் செலுத்துமாறு கூறினர்.

சந்தேகம் அடைந்த நான், இதுபற்றி விசாரித்தபோது, அவர்கள் என்னை மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் நான் அளித்த புகாரின்பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை.

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1½ கோடி வரை மோசடி செய்தவர்கள் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள். மேலும் பணப்பரிமாற்றம் முழுவதும் ஆன்லைனில் நடந்துள்ளது. இதனால் இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசாரால் சரியாக விசாரிக்க முடியாது. எனவே மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், “மனுதாரரின் புகாரின்பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்