திருமண கோஷ்டியினர் வந்த வேன் புதருக்குள் புகுந்தது; 6 பேர் காயம்

சென்னிமலை முருகன் கோவிலுக்கு திருமண கோஷ்டியினர் வந்த வேன் புதருக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-09-07 00:07 GMT
சென்னிமலை, 


சென்னிமலை அருகே உள்ள கூரபாளைத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கும், திருப்பூரை சேர்ந்த சங்கீதாவுக்கும் நேற்று காலை 8 மணி அளவில் சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதற்காக மணமக்களின் உறவினர்கள் 2 வேன்களில் முருகன் கோவிலுக்கு வந்தனர்.

திருமண நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு காலை 9.30 மணி அளவில் முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு மணமகன் ரஞ்சித்குமார் ஊரான கூரபாளையம் சென்றுவிட்டு, பிறகு திருப்பூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக கோவிலில் இருந்து மலை அடிவாரத்தை நோக்கி 2 வேன்களிலும் மணமக்களின் உறவினர்கள் வந்து கொண்டிருந்தனர். முதலில் வந்த வேனை முத்தூரை சேர்ந்த சேகர் (வயது 24) என்பவர் ஓட்டினார்.

இந்த வேனில் மணமக்களின் உறவினர்கள் சுமார் 25 பேரும், பின்னால் வந்த வேனில் மணமக்கள் உள்பட பலரும் இருந்தனர். மலைக்கோவில் ரோட்டில் உள்ள ஒரு வளைவில் திரும்பும் போது சேகர் ஒட்டி வந்த வேன் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டை விட்டு விலகி புதருக்குள் புகுந்தது.

இதில் வேனின் முன்பக்க கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தன. அப்போது வேனுக்குள் இருந்தவர்கள் ‘அய்யோ, அம்மா’ என அலறினர். விபத்தை பார்த்ததும் பின்னால் வந்த மணமக்கள் இருந்த வேன் நிறுத்தப்பட்டது. உடனே அதில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிச்சென்று விபத்தில் சிக்கிய வேனில் இருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சென்னிமலை வனக்காவலர் தேவராஜன், வன ஊழியர் ஆனந்த் ஆகியோரும் விரைந்து சென்று வேனுக்குள் இருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் (60), ரவி (55), கூரபாளையத்தை சேர்ந்த ஆண்டவன் (50), சண்முகம் (45), குருவாள் (60), ஜோதி (55) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். இதில் ராஜேந்திரன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும், ஆண்டவன், சண்முகம், ரவி, குருவாள், ஜோதி ஆகிய 5 பேரும் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் புதருக்குள் சென்ற போது அந்த பகுதியில் மண் நிறைந்து காணப்பட்டது. இதனால் வேனின் சக்கரம் மண்ணில் சிக்கிக்கொண்டது. இதன்காரணமாக மேற்கொண்டு வேன் நகர முடியாமல் அங்கேயே நின்றுவிட்டது. மண்ணிற்குள் வேன் சக்கரங்கள் புதையாமல் இருந்திருந்தால் பக்கத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்று வேனில் வந்தவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்