மாவட்ட செய்திகள்
அனைத்து மருத்துவமனைகளையும் சுகாதாரத்துறையில் பதிவு செய்ய வேண்டும்

அனைத்து மருத்துவமனைகளையும் சுகாதாரத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் ஆங்கில மருத்துவ முறையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பல் மருத்துவ மையம், பல் மருத்துவமனை, எண்டோஸ்கோபி எனப்படும் உடல் குழாய் உள்நோக்கல் மருத்துவ நிலையம், மருத்துவ ஆய்வகங்கள், எக்ஸ்-ரே, அல்ட்ரா சோனாகிராம், இ.சி.ஜி., சிடி ஸ்கேன் நிலையம் போன்றவற்றை தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் சுகாதாரத்துறையில் பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல் இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி மருத்துவ முறைகளான ஆயுஷ் மையம், சித்தா, யுனானி, ஆயர்வேத மற்றும் இயற்கை மருத்துவ முறைகளான யோகா மருத்துவ முறை, நீர் சிகிச்சை மருத்துவ முறை, சேற்று மண் சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்கு பஞ்சர், அக்கு பிரசர் உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமுறைகளையும் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை tam-i-l-n-a-du-c-l-i-n-i-c-a-l-est-a-b-l-is-h-m-ent.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ‘மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர்’ பெயரில் ரூ.5 ஆயிரம் வங்கி வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். மேலும், தீயணைப்பு சான்றிதழ் நகல், மாசுக்கட்டுப்பாட்டு நிறுவன சான்றிதழ் நகல், பயோ-மெடிக்கல் வேஸ்ட் சான்றிதழ் நகல், கட்டிட உறுதிதன்மை சான்று நகல், கட்டிட அனுமதிச்சான்று நகல் மற்றும் டாக்டர், செவிலியர், செவிலிய உதவியாளர், மருந்தாளுநர் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்பாளர் ஆகியோரின் பதிவெண் உள்ள சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறி இருந்தார்.