மாவட்ட செய்திகள்
தசரா விழாவில் பங்கேற்க வந்துள்ள 6 யானைகளுக்கு நடைபயிற்சி தொடக்கம்

தசரா விழாவில் பங்கேற்க வந்துள்ள 6 யானைகளுக்கும் நேற்று நடைபயிற்சி தொடங்கியது. மேலும் யானைகளின் எடை கணக்கீடு செய்யும் பணியும் நடந்தது.
மைசூரு,

ஆண்டுதோறும் விஜயதசமி விழாவையொட்டி வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா 10 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. குடகு, தட்சிணகன்னடா மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தசரா விழாவை எளிமையாக கொண்டாட அரசு தீர்மானித்துள்ளது.

இந்த தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக கஜபடை ஊர்வலம் என்னும் யானைகள் ஊர்வலம் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதில் அர்ஜூனா என்ற யானை, காவல் தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து செல்லும். அதன் பிறகு மற்ற யானைகள் பின்தொடர்ந்து செல்லும். அதையடுத்து கலைக்குழுவினர், அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக செல்லும். இந்த காட்சியை வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் சுமார் 5 லட்சம் பேர் கண்டு களிப்பார்கள்.

இந்த நிலையில் தசரா விழாவில் கலந்துகொள்ள அர்ஜூனா, ஷைத்ரா, வரலட்சுமி, தனஞ்செயா, கோபி, விக்ரம் ஆகிய 6 யானைகளும் கஜபயணமாக கடந்த 2-ந்தேதி மைசூருவுக்கு வந்தன. மைசூரு அசோக்புரத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த 6 யானைகளும் நேற்று முன்தினம் அரண்மனைக்கு பூரண கும்ப மரியாதையுடன் அழைத்து வரப்பட்டன.

அரண்மனை வளாகத்திலேயே யானைகள் தங்க, தகரத்தால் ஆன கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகளின் பாகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கவும், தகரத்தால் ஆன கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யானை பாகன்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் வகையில் தற்காலிக பள்ளிக்கூடமும் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

நடைபயிற்சி தொடக்கம்

இந்த நிலையில் தசரா விழாவில் கலந்துகொள்ளும் யானைகளில் அர்ஜூனா தங்க அம்பாரியை சுமந்து செல்வது வழக்கம். அதுபோல் மற்ற யானைகளும் சாமி சிலைகள் உள்ளிட்டவற்றை சுமந்தபடி செல்லும். இதனால் அந்த யானைகளுக்கு மணல் மூட்டைகளை சுமந்தபடி நடைபயிற்சி அளிக்கப்படும். மேலும் தசரா விழாவின் போது பட்டாசு வெடிப்பது வழக்கம். அப்போது யானைகள் மிரளாமல் இருக்க பீரங்கி குண்டு வெடித்து பயிற்சி வழங்கப்படும்.

அதன்படி நேற்று காலை 6 யானைகளும் மைசூரு அரண்மனையில் இருந்து நடைபயிற்சியை தொடங்கியது. இந்த பயிற்சி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பன்னிமண்டபம் வரை நடந்தது. அதுபோல் மீண்டும் நடந்தே யானைகள் அரண்மனை வளாகத்தை வந்தடைந்தது.

பின்னர் யானைகளின் உடல் எடை கணக்கிடும் பணி நடந்தது. அதாவது, தசரா விழாவின் போது யானைகள் உடல் ஆரோக்கியத்தை கண்டறியும் வகையில் இந்த எடை கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதாவது எடைமேடை மீது யானைகளை நிறுத்தி இந்த எடை கணக்கீடு செய்யப்பட்டது.

இதில் தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை 5,650 கிலோ எடையும், ஷைத்ரா 2,970 கிலோ எடையும், வரலட்சுமி 3,120 கிலோ எடையும், தனஞ்செயா 4,040 கிலோ எடையும், கோபி 4,435 கிலோ எடையும், விக்ரம் 3,990 கிலோ எடையும் இருப்பது தெரியவந்தது. இதில் கடந்த ஆண்டை விட அர்ஜூனா யானை 400 கிலோ எடை அதிகரித்து இருப்பது தெரியவந்தது.