மாவட்ட செய்திகள்
எலிக்காய்ச்சல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் மருத்துவ குழுவினர் சோதனை

கேரளாவில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக-கேரள எல்லையில் மருத்துவ குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கம்பம், 


கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இயற்கை பேரழிவில் இருந்து கேரள மக்கள் மீண்டு கொண்டிருக்கும் வேளையில் தற்போது எலிக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எலிக்காய்ச்சலுக்கு 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலும் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தோட்ட வேலைக்காக சென்று வருகின்றனர். இதேபோல் கேரளாவின் பல பகுதியிலிருந்தும் தமிழகத்திற்கு மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் கேரளாவில் வேகமாக பரவிவரும் இந்த எலிக்காய்ச்சல் தமிழகத்திலும் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லைப்பகுதிகளான போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து, சோதனை செய்ய மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் வரதராஜனுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் நேற்று முதல் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வாகனங்களில் வருபவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் எலிக்காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து துண்டுபிரசுரங்கள் வழங்குகின்றனர்.

இதேபோல் கம்பம்மெட்டு சாலை பழைய போலீஸ் சோதனை சாவடி அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் கிராம சுகாதார செவிலியர்கள் கேரளாவில் இருந்து வரும் மக்கள் மற்றும் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று சோதனை செய்தனர். அவர்களுக்கு எலிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டும், தகவல் சேகரிக்கப்பட்டும் வருகின்றன.