வருசநாடு அருகே செந்நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

வருசநாடு அருகே செந்நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலியாகின.

Update: 2018-09-07 22:34 GMT
கடமலைக்குண்டு, 

வருசநாடு அருகே சீலமுத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் சீலமுத்தையாபுரம் அருகே உள்ள வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்றுமுன்தினம் செல்வராஜ் வழக்கம்போல ஆடுகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

ஆடுகளை மேயவிட்டு விட்டு ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தார். அப்போது திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்கும் இடத்துக்கு அவர் விரைந்து சென்றார். அப்போது ஆடுகளை செந்நாய்கள் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து செந்நாய்களை அவர் விரட்டி விட்டார். இருப்பினும் செந்நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பரிதாபமாக செத்தன.

இதையடுத்து மற்ற ஆடுகளை அழைத்து கொண்டு, செல்வராஜ் வீட்டுக்கு வந்தார். செந்நாய்கள், ஆடுகளை கடித்தது குறித்து பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் சிலர் இறந்த ஆடுகளை மீட்பதற்காக வனப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது அந்த இடத்தில் 2 ஆடுகளின் உடல்கள் மட்டும் கிடந்தது. மற்ற 2 ஆடுகளின் உடல்களை செந்நாய்கள் வனப்பகுதிக்குள் இழுத்து சென்றுவிட்டது. இதுகுறித்து செல்வராஜ் வருசநாடு வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நேற்று காலை வருசநாடு வனச்சரகர் இக்பால் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆடுகளின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘செந்நாய்களால் ஆடுகள் தாக்கப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட செல்வராஜுக்கு வனத்துறையின் சார்பில் நிவாரண தொகை வழங்க முடியாது என்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சீலமுத்தையாபுரம் கிராம மக்களிடம் வனப்பகுதியில் செந்நாய்கள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மேலும் செய்திகள்