மாவட்ட செய்திகள்
மைசூரு ராஜகுலத்தின் பெருமையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளது இளவரசர் யதுவீர் பேட்டி

அரசியல் செய்யும் திறமை எனக்கு இல்லை என்றும், மைசூரு ராஜகுலத்தின் பெருமையை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் இளவரசர் யதுவீர் கூறினார்.
ஹாசன்,

ஹாசன் டவுன் ஹாசனாம்பா கலையரங்கில் கன்னட சாகித்ய பரிஷத் சார்பில் நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மைசூரு இளவரசர் யதுவீர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இளவரசர் யதுவீர் ஹாசன் டவுனில் உள்ள தனியார் ஓட்டலில் இருந்து நிகழ்ச்சி நடந்த கலையரங்கிற்கு வெள்ளியால் ஆன குதிரை வண்டியில் அழைத்து வரப்பட்டார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இளவரசர் யதுவீரிடம் நிருபர்கள் நீங்கள் ேதர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கையில், எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை, அரசியல் செய்யும் திறமையும் எனக்கு இல்லை. மக்கள் சேவை செய்ய வேண்டும் என்றால் அரசியலில் இருந்து கொண்டு தான் செய்ய வேண்டும் என்று இல்லை. எப்படி வேண்டும் என்றாலும் செய்யலாம். மைசூரு ராஜ குலத்தின் பெருமையை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு உள்ளது.

மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு நான் விரைவில் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். தசரா விழாவில் பங்கேற்ற அழைக்கும் போது மன்னர் குடும்பத்தினருக்கு கவுரவ நிதி வழங்க கூடாது என்று கன்னட எழுத்தாளர் நஞ்சேராஜா அர்ஸ் கூறியது பற்றி எனக்கு எதுவும் ெதரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.