மாணவ– மாணவிகளை ஆசிரியை தாக்கியதாக கூறி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

தாராபுரத்தில் மாணவ–மாணவிகளை ஆசிரியை தாக்கியதாக கூறி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-08 23:00 GMT

தாராபுரம்,

தாராபுரம் சித்ராவுத்தன்பாளையத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் பலர் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் விஜயா (வயது 46) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவ–மாணவிகள் தங்களது சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளியின் முக்கிய பாதை வழியாக வெளியே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு நின்றிருந்த ஆசிரியை விஜயா மாணவ–மாணவிகள் 9 பேரை தனியாக அழைத்து எந்த காரணமும் இல்லாமல் கைகளில் பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும் என்று கூறி மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகள் பள்ளிக்கு அருகில் நின்று வலி தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் தங்களது பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறி அழுதனர். இதனால் பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று பார்த்தனர். ஆனால் ஆசிரியை விஜயா அங்கு இல்லை. எனவே பெற்றோர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவ–மாணவிகளுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர், ஆசிரியை விஜயாவை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா மற்றும் தாராபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் தனபாலன், சிவசுப்பிரமணியம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவ–மாணவிகளை தாக்கிய ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். ஆனால் மாணவ–மாணவிகளின் பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளுடன் தாராபுரம் கல்வி மாவட்ட அலுவலர் சிவக்குமாரை சந்தித்து விவரத்தை தெரிவித்து ஆசிரியை விஜயாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த கல்வி அலுவலர், ஆசிரியை விஜயா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்படுவார் என்று கூறினார்.

ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாராபுரம் கொளிஞ்சிவாடி நகராட்சி நடுநிலை பள்ளியில் பணியாற்றிய போதும் ஆசிரியை விஜயா அங்கு படித்த ஒரு மாணவனை தலையில் தாக்கினார். இது தொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆசிரியை விஜயா பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்