மாவட்ட செய்திகள்
அதிவேக காற்றின் காரணமாக பழுது: மீனவர்களுடன் கடலில் தத்தளித்த படகு

அதிவேக காற்றின் காரணமாக பழுது: மீனவர்களுடன் கடலில் தத்தளித்த படகு கடலோர காவல்படையினர் மீட்டனர்.
சென்னை,

சென்னை ராயபுரத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி ‘ஜெயராமன்’ எனும் மீன்பிடி படகில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்றைய தினம் பிற்பகல் 1.20 மணிக்கு, கிழக்கு பகுதியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் படகு சென்றபோது அதிவேக காற்று வீசியது.

இதில் படகு சேதம் அடைந்தது. படகில் கடல் நீர் புகுந்ததால் அதில் இருந்த மீனவர்கள் பதற்றம் அடைந்தனர். சேதம் அடைந்த நிலையில் அந்த படகு கடலில் தத்தளித்து கொண்டிருந்தது.

இந்த தகவல் அறிந்ததும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘அபீக்’ கப்பல் மூலம் மீட்பு நடவடிக்கை நடந்தது. பிற்பகல் 3.55 மணியளவில் மீட்பு நடவடிக்கை தொடங்கியது. மாலை 6 மணிக்கு படகில் இருந்த கடல் நீர் அப்புறப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த படகு பத்திரமாக சென்னை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து படகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகும் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.