மாவட்ட செய்திகள்
வேளச்சேரியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

போதை மாத்திரைகளை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு போதை மாத்திரைகளை வினியோகம் செய்த மருந்து கடைக்காரர்கள் 2 பேரும் கைதானார்கள்.
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி, கிண்டி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி, அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ஷசாங்சாய் ஆகியோர் மேற்பார்வையில் கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், ஸ்ரீதர், சேகர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் வேளச்சேரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிய ஆலந்தூரைச் சேர்ந்த மஸ்தான் அகமது(வயது 24) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் போதைக்கு அடிமையான அவர், தன்னைப்போல் போதைக்கு அடிமையான ஆலந்தூரைச் சேர்ந்த அலிஸ்டன் அசோக்(23), வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ்(21), ஆதம்பாக்கத்தை சேர்ந்த விஷால் அருண்(19) ஆகிய 3 பேருடன் சேர்ந்து தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் இவர்கள் 3 பேரும் தனியாக மோட்டார்சைக்கிளில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபடுவார்கள். அந்த செல்போனை மஸ்தான் அகமதுவிடம் கொடுத்து அதற்கு பதிலாக போதை மாத்திரைகளையும், சில நேரங்களில் பணத்தையும் பெற்றுச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து மஸ்தான் அகமது உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 13 செல்போன்கள், 200 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கைதான மஸ்தான் அகமதுவிடம் மேலும் நடத்திய விசாரணையில், சென்னை கே.கே.நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள மருந்து கடைகளில் இருந்து அவர் போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்தியதுடன், மற்றவர்களுக்கு ரூ.1,500-க்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த தகவலின்பேரில் அவருக்கு போதை மாத்திரைகளை வினியோகம் செய்ததாக மருந்து கடைக்காரர்களான கே.கே.நகரைச் சேர்ந்த ஜெயசங்கர்(35), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரூபன்சக்கரவர்த்தி(35) ஆகிய மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மேலும் கூறியதாவது:-

செல்போன் பறிப்பில் ஈடுபட்டு கைதான 4 பேரும், போதை மாத்திரைகளை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்த மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலமாக நரம்பில் செலுத்தினால், 13 மணிநேரம் வரை போதையில் மிதப்பார்கள். இதனால் தைரியமாக பட்டப்பகலிலும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

மருத்துவர் சீட்டு இல்லாமல் அந்த மாத்திரைகளை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று விதி உள்ளது. மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தூக்கம் வராமல் அதிக தொந்தரவு கொடுப்பவர்களுக்கு இந்த மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை செய்வது வழக்கம்.

இதனை சாப்பிட்டால் தூக்கம் வருவதுடன், போதையும் இருக்கும். இதுபோன்ற மாத்திரைகளைத்தான் செல்போன் கொள்ளையர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

கே.கே.நகர், கோடம்பாக்கத்தில் உள்ள மருந்து கடைகளில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதுடன் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கும் கூடுதல் விலைக்கு விற்று உள்ளனர்.

மும்பையில் இருந்து இந்த மாத்திரைகளை வாங்கும் மருந்து கடைக்காரர்கள், 10 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டையை ரூ.280-க்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் ரூ.650-க்கு விற்றுள்ளனர். இதனை வாங்கி பயன்படுத்திய செல்போன் கொள்ளையர்கள், ரூ.1,500-க்கு வெளியில் விற்று உள்ளனர்.

பொதுமக்களிடம் பறிக்கும் செல்போன்களை சிலநேரங்களில் விற்பனை செய்யாமல் மருந்துக்கடையில் கொடுத்து அதற்கு பதிலாக போதை மாத்திரைகளை வாங்கி உள்ளனர்.

கைதான கொள்ளையர்களில் மஸ்தான் அகமதுதான், போதை மாத்திரைகளை அதிக அளவில் விற்பனை செய்துள்ளார். போலீஸ் பிடியில் சிக்கியதும் அவரது செல்போனுக்கு போதை மாத்திரைகளை கேட்டு 400 பேர் போன் செய்து உள்ளனர். அவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ரூபன் சக்கரவர்த்தியின் மருந்துக்கடையை மூடுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. கே.கே.நகரில் உள்ள மருந்துக்கடையும் ‘சீல்’ வைக்கப்பட உள்ளது. இதே போன்று சென்னையில் வேறு மருந்துக்கடைகளிலும் போதை மாத்திரைகள் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.