அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும்

கடலூர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் அறிவுரை வழங்கினார்.

Update: 2018-09-09 21:45 GMT
கடலூர், 


விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடலூர் உட்கோட்டத்துக்குட்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு சிலை அமைப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சதுர்த்தியை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவேண்டும். 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல், தீயணைப்பு, உள்ளாட்சி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன கலவைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது.

சிலை வைக்கப்படும் பந்தல் எரியும் தன்மை உடையதாக இருக்கக்கூடாது. கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியை பயன்படுத்தக்கூடாது. குறிப்பிட்ட மதங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பக்கூடாது. சிலை வைத்த 5 நாட்களுக்குள் கரைக்க வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அனுமதியில்லாத இடங்களில் சிலை வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஏழுமலை, வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார், சிலை அமைப்பாளர்கள், இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்