மாவட்ட செய்திகள்
தக்கலை அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பலி

தக்கலை அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
பத்மநாபபுரம்,


களியக்காவிளை அருகே கேரள பகுதியான பாறசாலையை சேர்ந்தவர் ஜெயசிங் (வயது 34), எலக்ட்ரீசியன். இவருக்கு அனு (30) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு. ஜெயசிங் தனது வேலைக்கு தேவையான பொருட்களை வாங்க அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் பொருட்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பாறசாலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார். மார்த்தாண்டத்தை கடந்து தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில் வந்த போது எதிரே ஒரு கார் வந்தது. காரை இரவிபுதூர்கடையை சேர்ந்த விஸ்பார் (40) ஓட்டி வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

இதில் ஜெயசிங் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் ஜெயசிங்கை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஜெயசிங் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் விஸ்பார் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.