தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி - டி.டி.வி.தினகரன் பேட்டி

தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி என்று காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2018-09-10 23:30 GMT

காரைக்குடி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. காரைக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று(நேற்று) நடக்கும் பாரத் பந்த் மிகவும் அத்தியாவசியம். இதனை அ.ம.மு.க. ஆதரிக்கிறது. மத்திய அரசு சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். ஏழை–எளிய சாதாரண மக்கள் நலமுடன் வாழ வேண்டுமானால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். உலக தமிழர்கள் அனைவரும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். தமிழக கவர்னர் அவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது நடப்பது மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சி நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் மாறி, மாறி பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டி வருவது தேவையற்ற அரசியல். மேலும் அது அனாவசியமான அரசியலும் கூட. வர இருக்கின்ற திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க அ.ம.மு.க. தயாராக உள்ளது. 2 தொகுதிகளிலும் நாங்களே வெற்றி பெறும். இடைத்தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்