கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தொழிலாளி கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொலை செய்த மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2018-09-10 21:45 GMT
தேனி,


தேனி அருகே உள்ள அன்னஞ்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு முனியாண்டி தனது வீட்டின் மொட்டை மாடியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவருடைய மனைவி லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்து (23) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததும், இதற்கு இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து முனியாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.
சம்பவத்தின் போது முத்து ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த வழக்கில் லட்சுமி, முத்து ஆகிய 2 பேரையும் அல்லிநகரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு கூறினார்.

கொலை வழக்கில் லட்சுமி, முத்து ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்