மாவட்ட செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு, ரூ.85 கோடி மதிப்பிலான பனியன் உற்பத்தி பாதிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டன. பின்னலாடை நிறுவனங்கள் செயல்படாததால் ரூ.85 கோடி மதிப்பிலான பனியன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
திருப்பூர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தொழிற்சங்கத்தினரும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். திருப்பூரில் நேற்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. வணிக வளாகங்கள், மளிகை கடைகள், பேக்கரி, டீ கடைகள், ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடைகள் திறந்திருந்தன.திருப்பூரில் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி மார்க்கெட், உழவர் சந்தைகள் செயல்படவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. திருப்பூரின் முக்கிய ரோடுகளான அவினாசி ரோடு, குமரன் ரோடு, காலேஜ் ரோடு, மங்கலம் ரோடு, பல்லடம் ரோடு, பி.என்.ரோடு, காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு பகுதிகளில் உள்ள கடைகள் முற்றிலும் மூடப்பட்டு இருந்தன. காதர்பேட்டையில் உள்ள பனியன் ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படவில்லை.திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. ரோடுகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகன போக்குவரத்து வழக்கம் போல் இருந்தன.சிறு, குறு மற்றும் நடுத்தர பனியன் உற்பத்தி நிறுவனங்கள் 90 சதவீதம் மூடப்பட்டன. முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பனியன் நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. பனியன் நிறுவனங்கள் செயல்படாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உடுமலை, பொள்ளாச்சி பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்று பொழுதை கழித்தனர். திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.பெரும்பாலான பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. ஓட்டல்கள் மூடப்பட்டதால் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கி தொழிலாளர்கள் சாப்பிட்டனர். மாநகரின் முக்கிய வீதிகளில் தள்ளுவண்டிகளில் ‘பாஸ்ட் புட்’ உணவகங்கள் காணப்பட்டன. முழு அடைப்பு போராட்டம் காரணமாக பின்னலாடை துறையில் நேற்று ஒருநாள் ரூ.85 கோடிக்கு ஆடைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.முழு அடைப்பு போராட்டத்துக்கு அனுப்பர்பாளையம் பகுதி பாத்திர உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்து நேற்று பாத்திர பட்டறைகளை திறக்கவில்லை. இதன்காரணமாக 200–க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்படவில்லை. இதனால் பாத்திர பட்டறை தொழிலாளர்கள் நேற்று வேலையிழந்தனர். முழு அடைப்பு போராட்டத்தால் நேற்று ஒருநாள் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டன.பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் நேற்று செயல்பட்டன. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு நேற்று காலாண்டு தேர்வு தொடங்கியது. பள்ளி மாணவ–மாணவிகளை அழைத்துச்செல்லும் ஆட்டோக்கள், வேன்கள் வழக்கம் போல் ஓடின. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்துக்கு பொதுமக்கள் குறைவாக வந்திருந்தனர். இதுபோல் அரசு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.மாவட்டத்தில் அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி பகுதிகளில் கடைகள் நேற்று முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தன.முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தியேட்டர்களில் நேற்று காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 56 தியேட்டர்களிலும் நேற்று காலை காட்சி ரத்து செய்யப்பட்டன. இதில் திருப்பூர் மாநகரில் உள்ள 36 தியேட்டர்களும் அடங்கும். தியேட்டர்களில் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு அந்தந்த தியேட்டர்களுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்தன.