கணவர் விவாகரத்து கேட்டதால் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் விவாகரத்து கேட்ட வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது.

Update: 2018-09-11 00:00 GMT
சூரமங்கலம்,

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- சேலம் போடிநாயக்கன்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 33). இவர், ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கும், சூரமங்கலம் புதுரோடு இந்திராநகர் பகுதியை சேர்ந்த கவுதமன் (35) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. திருமணத்தின்போது கவுதமன் பெங்களூருவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்ததாகவும், அதன்பிறகு அவர் சேலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது கவுதமன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு புவனேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இதையடுத்து இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். போடிநாயக்கன்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்து தினமும் ஜலகண்டாபுரத்திற்கு வேலைக்கு செல்வதை புவனேஸ்வரி வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் போடிநாயக்கன்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் புவனேஸ்வரி ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை நீண்டநேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை செல்வராஜ் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது புவனேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஸ்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த புவனேஸ்வரி, கடந்த ஜூலை மாதம் தான் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

பிரிந்து வாழ்ந்த கணவன்-மனைவி இருவரையும் சேர்த்து வைக்க உறவினர்கள் பலதடவை முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டு மூலம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி, கணவரை சந்தித்து இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறியதாகவும், அதற்கு கவுதமன் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வேதனையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புவனேஸ்வரிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆவதால் சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரனும் விசாரணை நடத்தி வருகிறார். பெண் போலீஸ் ஏட்டு குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் அவருடன் பணியாற்றி வந்த சக போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்