மாவட்ட செய்திகள்
தி.மு.க.-பா.ஜனதா இடையே கூட்டணி என்று வதந்தியை கிளப்புகிறார்கள் நாமக்கல்லில் சுப.வீரபாண்டியன் பேச்சு

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாமக்கல்லில் புகழ் வணக்க கூட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்,

கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் பேசும்போது கூறியதாவது:-தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அரசியல், திரைத்துறை, ஊடகம் என சென்ற இடம் எல்லாம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர் ஆவார்.

அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வை 50 ஆண்டு காலம் வளர்ச்சிபாதையில் கொண்டு சென்றது கருணாநிதி. அது போல அவருக்கு பிறகு தி.மு.க.வை வளர்ச்சிபாதையில் மு.க.ஸ்டாலின் கொண்டு செல்வார். கருணாநிதியை எதிர்த்தவர்கள் எல்லாம் தற்போது பாராட்டுகிறார்கள். நாடு முழுவதும் காவிமயமாக்க முயற்சிக்கும் பா.ஜனதாவின் கனவை மு.க.ஸ்டாலின் தவிடு பொடியாக்குவார். தி.மு.க., பா.ஜனதா இடையே கூட்டணி என்பது வதந்தி. இதையும் அவர்களே கிளப்பி வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, கே.பி.ராமசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன், மாநில நிர்வாகிகள் நக்கீரன், ராணி, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார், மாவட்ட அவை தலைவர் உடையவர், பொருளாளர் செல்வம் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.