மாவட்ட செய்திகள்
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க, முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தா.பேட்டை,

தா.பேட்டை ஒன்றியம், வாளவந்தி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியப்பட்டி, கோமாளியூர், கம்பளிப்பட்டி, சித்தரப்பட்டி, கீழதொட்டியப்பட்டி, களத்துப்பட்டி, நடுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி கிராமங்களில் பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனை தீர்க்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த மாதம் தொட்டியப்பட்டி-வாளவந்தி சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்ககோரி காலிக்குடங்களுடன் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனை சந்தித்து தொட்டியப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் கிடையாது. கடந்த 6 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.