மாவட்ட செய்திகள்
அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை அறிந்து சிறுபான்மையினர் பயன்பெற வேண்டும்

அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை அறிந்து சிறுபான்மையினர் பயன்பெற வேண்டும் என்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பிரகாஷ் பேசினார்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பிரகாஷ் கலந்து கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கல்வி உதவித்தொகை, ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு அரசின் நிதியுதவி ரூ.20 ஆயிரம் வழங்கும் திட்டம், தனிநபர் தொழில்கடன் மற்றும் குழுக்கடன், புதுக்கோட்டை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள், உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் மூலம் வழங்கப்பட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து சிறுபான்மையினர் சமுதாய மக்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது;-

தமிழக அரசு சிறுபான்மையினர் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லும் புனித பயண திட்டத்தின் கீழ் இதுவரை 4 ஆயிரம் பேர் ஜெருசலேத்திற்கு புனித பயணம் சென்று உள்ளனர். நாகூர் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழக அரசு 40 கிலோ சந்தன கட்டையை வழங்கி வருகிறது. ரம்ஜான் நாட்களில் மசூதிகளில் நோன்பு கஞ்சி வழங்கும் வகையில் 4 ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டு வந்ததை, தற்போது 6 ஆயிரம் டன் அரிசி என தமிழக அரசு உயர்த்தி வழங்கி வருகிறது.

உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவித்தொகை, தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே சிறுபான்மையினர் நலனுக்காக அரசால் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு சிறுபான்மையினர் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.