விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்

மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று கலெக்டர் வீர ராகவராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-11 22:40 GMT
ராமநாதபுரம், 


இதுகுறித்து கலெக்டர் கூறியுள்ளதாவது:- விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் வழி முறைகளை பின்பற்றுவது நமது நீர்நிலைகள் மாசடைவதை தடுக்க மிகவும் பேருதவியாக அமையும். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் விநாயகர் சிலைகள் களிமண், கிழங்கு மாவு போன்ற வேதிப்பொருட்கள் கலக்காத மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். இவற்றில் பூசப்படும் வர்ணங்கள் நீரில் கரையும் தன்மையுடையதாகவும், எவ்வித நச்சுத்தன்மையற்றதாகவும் இருத்தல் வேண்டும். நச்சுத்தன்மையுடைய, மக்கும் தன்மையற்ற வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை விநாயகர் சிலைகளில் பயன்படுத்துதல் கூடாது.

மேலும் விநாயகர் சிலைகள் போலீசாரால் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ள இடம் மற்றும் ஊர்வலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. ஊர்வலம் மாலை 6 மணிக்கு மேல் செல்லக்கூடாது. அனுமதி அளிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகளை கரைக்கும் முன்பு, அதில் உள்ள பூக்கள், மாலை, இலை, துணி மற்றும் இதர பொருட்கள் நீக்கப்பட வேண்டும்.

மாவட்டத்தில் தொண்டி, பாசிப்பட்டினம், தாமோதிரப்பட்டினம், திருப்பாலைக்குடி, தெற்கு வளமாவூர், உப்பூர் மோர்பண்ணை, தேவிப்பட்டினம் நவபாஷன, முடிவீரன்பட்டினம் கடற்கரைகளிலும், ராமநாதபுரம் நொச்சிவயல் ஊருணி, வெள்ளரி ஓடை ஊருணி, தலைதோப்பு கடற்கரை, வேலுநகர் ஊருணி, ஆற்றங்கரை ஆறு மற்றும் தர்காவலசை, பிரப்பன்வலசை, மண்டபம், பாம்பன் பாலம் கடற்கரைகள், தங்கச்சிமடம் வில்லுண்டி தீர்த்தம், ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரைகளில் கரைக்க வேண்டும்.

கீழக்கரை அலவாக்கரைவாடி, சின்ன மாயகுளம், சின்ன ஏர்வாடி, கொட்டக்குடி ஆறு, குதக்கோட்டை பெரிய ஊருணி, பெரியப்பட்டணம் இந்திரா நகர், முத்துப்பேட்டை, களிமண்குண்டு சண்முகவேல்பட்டினம் கடற்கரைகளில் கரைக்க வேண்டும்.

உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில் ஊருணி, பரமக்குடி பெருமாள் கோவில் அருகில் வைகை ஆறு, கமுதி செட்டியூரணி, ராமசாமிபட்டி வேலுவூருணி, மேலமுந்தல், வாலிநோக்கம், எஸ்.மாரியூர் கடற்கரைகளிலும், நரிப்பையூர், திருவரங்கம் அம்பலத்தான் ஊருணிகளிலும், முதுகுளத்தூர் புளியன்குடி கண்மாய், பெரிய ஊருணி, சங்கரபாண்டி ஊருணி ஆகிய இடங்களில் மட்டும் குறிப்பிட்ட வழி முறைகளின்படி விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்