வேலூரில் தடையை மீறி நடந்த காங்கிரஸ் கட்சி ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு

வேலூரில் நேற்று தடையை மீறி நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஊர்வலத்தில் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலரின் வேட்டிகள் அவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-11 22:53 GMT
வேலூர்,

மத்திய அரசு ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டர் ராமனிடம் மனு கொடுக்க வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக செல்ல வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை முருகன் கோவில் அருகில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு குவியத்தொடங்கினர். முன்னாள் எம்.பி. முனிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத், மாவட்ட தலைவர்கள் டீக்காராமன், பிரபு உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

ஆனால் அவர்களை ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதிக்க வில்லை. அதைத்தொடர்ந்து ஒவ்வொருவராக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர். காகிதப்பட்டறையில் சென்றபோது அட்டையில் விமானம் போன்று செய்து அதை வாகனத்தில் எடுத்து சென்றனர். அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஊர்வலமாக சென்றவர்களை இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், லோகநாதன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.

அதைத்தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினரை விரட்டிச்சென்று போலீசார் கைது செய்தனர்.

கைதாக மறுத்தவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலருடைய வேட்டிகள் அவிழ்ந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊர்வலத்தில் சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்