வானவில் : மஹிந்திராவின் புதிய அறிமுகம் ‘மராஸோ’

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ‘மராஸோ’ என்ற பெயரிலான எஸ்.யு.வி. மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.

Update: 2018-09-12 08:32 GMT
மராஸோ என்பது ஸ்பெயின் வார்த்தையாகும். இதற்கு ஆங்கிலத்தில் ‘ஷார்க்’ (தமிழில் சுறா) என்று அர்த்தம்.

மஹிந்திரா நிறுவனத்தின் வட அமெரிக்க தொழில்நுட்ப மையத்தில் உள்ள குழுவினர் இந்தக் காரை வடிவமைத்துள்ளனர். மும்பை காண்டிவெலியில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமான இத்தாலியின் பினின் பரினா வடிவமைப்புக் குழுவினரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

இதன் தோற்ற வடிவம் சுறாவைப் போன்று இருக்கும். இதன் உள்புறமும், வெளிப்புறமும் இதை நினைவுபடுத்தும். சர்வதேச அளவில் மிகச் சிறந்த வடிவமைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். இது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 7 பேர் பயணிக்கும் வகையிலான மாடலும் உள்ளது.

இதில் மஹிந்திரா நிறுவனத்தின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங்கில் ஆடியோ கட்டுப்படுத்தும் வசதி, பருவ நிலைக்கேற்ப ஏ.சி. காற்றை கட்டுப்படுத்தும் வசதி, வெளிச்சத்தை உமிழும் முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள் (டி.ஆர்.எல்.) ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும்.

இந்த கார் மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டொயோடா இனோவா கிறிஸ்டா ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் கருதுகிறது. அதிலும் குறிப்பாக ரூ.10 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையிலான வாகனப் பிரிவில் இதை நிலை நிறுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு, அனைத்து பெரு நகரங்களிலும் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் நாசிக் ஆலையில் தயாரிக்கப்படும் இந்தக்காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது 121 பி.ஹெச்.பி. சக்தியையும், 300 நியூட்டன் மீட்டர் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியது. இது 6 கியர்களைக் கொண்டது. இப்போதைக்கு ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்ட காரைத் தயாரிக்கும் திட்டமில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார், சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு 17.6 கி.மீ. தூரம் ஓடியது.

இதன் உள்புறத்தின் டேஷ் போர்டு கருப்பு வெள்ளை நிறத்தில் உள்ளது. விமானங்களில் உள்ளதைப் போன்ற வடிவமைப்பில் ஹேண்ட் பிரேக் உள்ளது. எல்.இ.டி. ஒளி உமிழும் டயல் போர்டு இருப்பதோடு, மேற்கூரையிலிருந்து ஏ.சி. பரவும் விதமாக வடிவமைத்துள்ளனர். இதனால் பின் இருக்கையில் இருப்பவர்களுக்கும் மிகச் சிறப்பான குளிர் காற்று வீசும். இத்தகைய கார் பிரிவில் இதுபோன்ற வசதி அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பயணத்தை இனிமையாக்க இதில் 7 அங்குல தொடு திரை உள்ளது.

பொதுவாக கார் பிரியர்களிடம் மஹிந்திரா தயாரிப்புகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் ‘மராஸோ’ இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

‘ஓ’ வரிசை பெயர்கள்

மஹிந்திராவின் தயாரிப்புகளின் பெயர்கள் அனைத்துமே ‘ஓ’ என்ற ஆங்கில எழுத்தில் முடியும் விதமாக இருக்கும். ஸ்கார்பியோ, பொலாரோ என இந்த பட்டியல் நீளும். அந்த வகையில் மராஸோ பெயரும் ‘ஓ’ என்ற ஆங்கில எழுத்தில் முடிவதால் சென்டிமென்டாக நியூமராலஜிப்படி இப்பெயரை இந்நிறுவனம் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

மேலும் செய்திகள்