மலேசியா, அபுதாபி, கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.21 லட்சம் தங்கம் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில், மலேசியா, அபுதாபி, கொழும்பில் இருந்து ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-09-12 22:30 GMT
சென்னை

சென்னை விமான நிலையத்தில், மலேசியா, அபுதாபி, கொழும்பில் இருந்து ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய சென்னையை சேர்ந்த ஈஸ்வரன்(வயது 52) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு(36) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலி மற்றும் 3 தங்க கட்டிகளை கைப்பற்றினார்கள்.

மேலும் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த உசேன்(42) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்து இருந்த சட்டையில் இருந்த அலங்கார பொத்தான்கள் தங்கத்தில் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 150 கிராம் தங்க பொத்தான்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில், மலேசியா, அபுதாபி, கொழும்பில் இருந்து ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இவர்கள் யாருக்காக இந்த தங்கத்தை கடத்தி வந்தனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என பிடிபட்ட 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்