எஸ்.கைகாட்டியில் மனுநீதி நாள் முகாம்: பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

எஸ்.கைகாட்டியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.35½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

Update: 2018-09-12 21:28 GMT
கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்டது எஸ்.கைகாட்டி. இங்கு அம்மன் நகரில் உள்ள சமுதாய கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. அதில் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு, ஆர்.டி.ஓ பத்ரிநாத், கோத்தகிரி தாசில்தார் ரவிக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதியோர், கல்வி, உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் ஈமச் சடங்கு உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, விலையில்லா சலவை பெட்டி, விவசாய கருவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் 110 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசிய தாவது:-

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

கோத்தகிரியில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழுவிற்கு 75 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் 30 பேர் மட்டுமே பணிக்கு வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.210 வழங்கப்படுகிறது. கூடுதல் பணியாளர்கள் வந்தால் மட்டுமே கூடுதல் நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். எனவே ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு பொதுமக்கள் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் நெடுகுளா ஊராட்சியில் ரூ.7 கோடியே 14 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது அம்மன் நகரில் ரூ.23 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் தொடங்கியுள்ளது. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர ஆவணங்களை பதிவு செய்யும் முகாம் நடத்தப்படும்.

48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் தாயகம் திரும்பிய மக்களுக்கு 1000 வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளார். அதில் நீலகிரி மாவட்டத்துக்கு 820 வீடுகள் வேண்டி பட்டியல் அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் நிதி பெற்று, வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படும். ஆதிவாசி மற்றும் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு பொதுமக்கள் நேரில் வராமலேயே 9943126000 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாக கோரிக்கை மனுக்களை அனுப்பலாம். அதன் மீது 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் நெடுகுளா ஊராட்சி மக்கள் கலந்துகொண்டனர். முடிவில் தாசில்தார்(அரசு கேபிள்) குப்புராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்