கார் உரசியதால் டிரைவருடன் தகராறு: சமாதானம் செய்ய வந்தவர் தள்ளி விட்டதில் ஆஸ்பத்திரி ஊழியர் சாவு

கார் உரசியதால் டிரைவருடன் தகராறு: சமாதானம் செய்ய வந்தவர் தள்ளி விட்டதில் ஆஸ்பத்திரி ஊழியர் சாவு

Update: 2018-09-13 20:21 GMT
பூந்தமல்லி, 

கார் உரசியதால் டிரைவருடன் தகராறில் ஈடுபட்ட ஆஸ்பத்திரி ஊழியரை சமாதானம் செய்ய வந்தவர் தள்ளி விட்டதில் அவர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.

குன்றத்தூரை அடுத்த நடுவீரப்பட்டு, ராம்ஜி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 42). தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை நந்தம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது அருகில் வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது உரசியதில் சண்முகம் கீழே விழுந்தார்.

பின்னர் எழுந்து வந்து கார் டிரைவரிடம், ஏன் இவ்வளவு வேகமாக காரை ஓட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். அப்போது திடீரென சமாதானப்படுத்தியவர்களில் ஒருவர் சண்முகத்தை பிடித்து தள்ளவே அவர் சாலையில் விழுந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி வந்த லாரி சண்முகம் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து சண்முகத்தை தள்ளி விட்ட நபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் குன்றத்தூர் போலீசார் வந்தனர். இந்த வழக்கை யார் எடுப்பது என்பதில் மிகுந்த குழப்பம் இருந்து வந்த நிலையில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இந்த வழக்கை எடுத்துக்கொண்டனர். பின்னர் சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து லாரி டிரைவர் மகாதேவன் (38), கார் டிரைவர் அப்துல் கரீம் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சண்முகத்தை தள்ளி விட்டு தப்பிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்