தாம்பரம் அருகே 10 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி

தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 10 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி தொடங்கியது.

Update: 2018-09-13 23:00 GMT
தாம்பரம், 

தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 10 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி தொடங்கியது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதாநகர், கிருஷ்ணமாச்சாரி தெருவைச்சேர்ந்தவர் சீனிவாசன். கட்டிடகலை நிபுணர். விநாயகரின் தீவிர பக்தரான இவர், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறுவிதமான விநாயகர் சிலைகளை கொண்ட கண்காட்சியை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து 12-வது ஆண்டாக இந்த ஆண்டு 10 ஆயிரம் விநாயகர் சிலைகளுடனான கண்காட்சி, தாம்பரம் அருகே சிட்லபாக்கம் காந்தி தெருவில் உள்ள லட்சுமிராம் கணேஷ் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் பல்வேறு விதவிதமான விநாயகர் சிலைகள் தரைதளம் மற்றும் 2 மாடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு கண்காட்சியில் புதிய வரவாக 25 தலைகள், 52 கைகளுடன் கூடிய சாம்பசிவ விநாயகர், சிவன்-பார்வதியை சுற்றிவந்து ஞானப்பழம் பெறும் விநாயகர், தம்பி முருகனுடன் உள்ள விநாயகர், நவக்கிரகங்களுடன் காட்சியளிக்கும் விநாயகர், தேவலோகத்தில் இருந்து மயில்மேல் பறந்துவரும் விநாயகர், பாம்பன் பாலத்தில் விநாயகர் போன்ற சிலைகள் இடம்பெற்று உள்ளன.

தண்ணீரில் படகு ஓட்டும் விநாயகர், குற்றால அருவியில் குளிக்கும் விநாயகர், தந்தை சிவன் உருவத்தில் ருத்ரதாண்டவமாடும் விநாயகர், ராட்டினத்தில் அமர்ந்து விளையாடும் விநாயகர், அனைத்துவித கற்களால் செய்யப்பட்ட விநாயகர், கண்ணாடியால் செய்யப்பட்ட விநாயகர், புல்லட் ஓட்டும் விநாயகர், நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் விநாயகர் என 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன. நேற்று இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்த கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் பொதுமக்கள் இலவசமாக இந்த கண்காட்சியை கண்டு ரசிக்கலாம் என கண்காட்சி அமைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்