அக்னிநட்சத்திர நாட்களை விட அதிகமாக சுட்டெரிக்கும் வெயில்

காவிரி டெல்டா பகுதிகளில் அக்னி நட்சத்திர நாட்களை விட அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Update: 2018-09-13 22:58 GMT
தஞ்சாவூர், 


ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கி விட்டாலே, கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாத பாடு படுவார்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தஞ்சையில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தியது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு தயங்கினர். வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வந்தனர்.

வெளியில்தான் இந்த நிலைமை என்றால், வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல்காற்றாகவே வந்தது.

கோடை காலத்தின் உச்சகட்டமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர நாட்களிலும் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் கோடை காலம் முடிந்த பின்னரும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. டெல்டா பகுதிகளில் பருவமழையும் கடந்த சில ஆண்டுகளாக பொய்த்து விட்டது. இதனால் கடும் வறட்சி நிலவி வந்தது.
நிலத்தடி நீர் மட்டமும் 300 அடிக்கும் கீழே இறங்கி விட்டது. இந்த நிலையில் வடமேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் கர்நாடகாவில் இருந்து அதிக அளவு தண்ணீர் வந்ததால் டெல்டா பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின.

கடந்த சில ஆண்டுகளாக காணப்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, அதிக அளவு நீர் வந்ததால் பூமியும் நீரை அதிக அளவில் உறிஞ்சுகிறது.
வறட்சியால் பூமி அதிக அளவு தண்ணீரை உறிஞ்சினாலும், பூமியின் வெப்பம் காரணமாக டெல்டா பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் அக்னிநட்சத்திர காலக்கட்டத்தை விட தற்போது வெயில் அதிக அளவு கொளுத்துகிறது. அதுவும் கடந்த ஒருவாரமாக வெயில் அதிக அளவு காணப்படுகிறது.

நேற்று அடித்த வெயிலால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது. நேற்று அடித்த வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தங்களது தலையில் துணியை மூடியபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
நடந்து சென்றவர்களில் பெரும்பாலானோர் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், குளிர்பானம் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். சிவகங்கை பூங்காவில் உள்ள நீச்சத்தில் குளத்திலும் சிறுவர்கள், பெரியவர்கள் என அதிக அளவில் குவிந்தனர். 

மேலும் செய்திகள்