சாரம் அவ்வைத்திடலில் 30 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை

புதுவை சாரம் அவ்வைத்திடலில் 30 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Update: 2018-09-14 01:03 GMT
புதுச்சேரி,

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நேற்று பூஜைகள் நடத்தப்பட்டன. சாரம் அவ்வைத்திடலில் 30 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த பூஜையில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு வழிபட்டார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., செல்வகணபதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர், பா.ஜ.க. துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், விநாயகர் சதுர்த்தி விழா பேரவை தலைவர் குமரகுரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் 23 அடி உயர விநாயகர் சிலையும், ரெட்டியார்பாளையம், பெரியார் நகர் பகுதிகளில் 12 அடி உயர விநாயகர் சிலைகளும், வைத்திங்குப்பம், பூரணாங்குப்பம், முதலியார்பேட்டை, வில்லியனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 10 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. வருகிற 17-ந் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. அன்று மதியம் 1.30 மணிக்கு சாரம் அவ்வைத்திடலில் இருந்து ஊர்வலம் புறப்படும்.

இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, அண்ணாசாலை, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக சென்று கடற்கரை சாலையில் முடிவடையும். பின்னர் கடலில் கரைக்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை விநாயகர் சதுர்த்தி விழா பேரவையினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்