வெளிமாநிலத்தவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் தொழிலாளர்களின் விவரம் அடங்கிய பதிவேடு பராமரிக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், அந்த தொழிலாளர்களின் விவரம் அடங்கிய பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்து உள்ளார்.

Update: 2018-09-14 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், அந்த தொழிலாளர்களின் விவரம் அடங்கிய பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்து உள்ளார்.

பதிவேடு பராமரிக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது குறித்த கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபகாலமாக அதிக அளவில் வெளி மாநில தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் குடிபுகுந்து, இங்கு உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பணியாற்றி வருகின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புசாரா துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இது உள்ளூர் பொதுமக்களுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வெளிமாநில தொழிலாளர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது அவசியமானதாக உள்ளது. ஆகையால் பிற மாநில தொழிலாளர்கள் குடியேற்ற சட்டத்தின்படி வெளிமாநில தொழிலாளர்களை பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள், அந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, தொழிலாளரின் முழு விவரம் அடங்கிய பாஸ்புத்தகம் வழங்கி இருக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு தனியாக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். அதில் தொழிலாளியின் முழுவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அதேபோன்று தமிழக அரசாணையின்படி வரையறுக்கப்பட்டு உள்ள படிவத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் புகைப்படமும் வைத்து இருக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அவ்வாறு செய்ய தவறியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளி மாநில தொழிலாளர்களை பணிக்கு வைத்து உள்ள அனைத்து தொழில் துறையினர், ஒப்பந்ததாரர்கள் உள்பட அனைவரும் இதனை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, துணை போலீஸ் சூப்பிரண்டு லிங்கதிருமாறன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், குற்ற ஆவணக்கூட போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்