சர்வதேச விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் மீட்பு

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் மீட்டனர். அதை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-14 23:00 GMT
மும்பை, 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் மீட்டனர். அதை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.

பயணி சிக்கினார்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று இரவு துபாயில் இருந்து விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினார்கள்.

அப்போது, முகமது இர்சாத் என்ற பயணி அங்கிருந்து நழுவி கழிவறை நோக்கி நடந்து சென்றார். இதனைக்கண்ட அதிகாரிகள் பயணியை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பயணி வைத்திருந்த ஒரு பார்சலை அங்குள்ள குப்பை தொட்டியில் வீசிவிட்டு வேகமாக வெளியே வந்தார்.

உடனே அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தனர். அதற்குள் அதிகளவில் தங்க கட்டிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் மொத்தம் 32 தங்க கட்டிகள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 4 லட்சம் ஆகும்.

ரூ.1 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

உடனே விரைந்து சென்று அதிகாரிகள் அந்த பயணியை மடக்கி பிடித்து சகார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, துபாயில் இருந்து ஒருவர் அந்த தங்க கட்டிகளை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்