வங்கி கடன் மோசடி வழக்கில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டேயின் சொத்துகள் முடக்கம்

வங்கி கடன் மோசடி வழக்கில் மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டேயின் சொத்துகளை முடக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-14 22:45 GMT
மும்பை, 

வங்கி கடன் மோசடி வழக்கில் மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டேயின் சொத்துகளை முடக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வழக்குப்பதிவு

பீட் மாவட்டம் பார்லி பகுதியில் ஜங்மித்ரா கூட்டுறவு பருத்தி ஆலை உள்ளது. இந்த ஆலையின் இயக்குனர்களில் ஒருவராக மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டேவு செயல்பட்டு வந்தார்.

2003 முதல் 2011-ம் ஆண்டுவரை இந்த ஆலை பீட் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பலகோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை.

இதுகுறித்து வங்கி நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில் 2013-ம் ஆண்டு தனஞ்செய் முண்டே மற்றும் இயக்குனர்கள் மீது பார்லி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முடக்க உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த அம்பாஜோகாய் பகுதியில் உள்ள மாவட்ட கூடுதல் கோர்ட்டு, வழக்கில் தொடர்புடைய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே உள்பட அனைவரின் சொத்துகளையும் முடக்க உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து தனஞ்செய் முண்டே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கோர்ட்டு வழங்கிய உத்தரவை என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திரித்து கூற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

இயக்குனர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவேண்டும் என்று உத்தரவு இல்லை. சொத்துகளை முடக்கவும், பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று மட்டுமே அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு இடைக்கால உத்தரவு மட்டுமே.

இது தொடர்பான நோட்டீஸ் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. நோட்டீஸ் கிடைத்தும் சட்டப்படி உத்தரவை ரத்து செய்வதற்கான பணிகளை தொடங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்