கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா 5 வகையான உணவு வழங்கப்பட்டது

அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் நேற்று கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

Update: 2018-09-14 23:10 GMT
திருச்சி,

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வ நாதம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் நேற்று கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதற்கு ப.குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ராஜாமணி சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து நலுங்கு வைத்து வளையலிட்டு சீர்வரிசையாக பூ, மஞ்சள், குங்குமம், வளையல், மற்றும் ஜாக்கெட் துணி ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சர்க்கரைப்பொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர்சாதம் என ஐந்து வகையான உணவுகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை கலெக்டர் வாசிக்க கர்ப்பிணிகள் அனைவரும் அதனை திரும்ப படித்து உறுதி எடுத்துக் கொண்டனர்.

இறுதியில் கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலெக்டரின் மனைவி பிரேமலதா ராஜாமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி புவனேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சம்சாத்பேகம், கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் அனிதா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்