சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க வரைபடம் தயாரிப்பு

சாமிதோப்பு பகுதியில் விமானநிலையம் அமைக்க வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள், விஜயகுமார் எம்.பி.யிடம் காண்பித்து விளக்கினர்.

Update: 2018-09-14 23:24 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு விஜயகுமார் எம்.பி. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல் கட்டமாக தமிழக அரசு அதிகாரிகளும், விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் அந்த இடத்தை ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்தநிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ள இடத்தின் வரைபடத்தை தயாரித்துள்ளனர். அந்த வரைபடத்தை நேற்று நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது அதிகாரிகள் காண்பித்து விளக்கம் அளித்தனர். அந்த வரைபடத்தில் சிறு, சிறு குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டிய விஜயகுமார் எம்.பி., வேறு படத்தை உடனடியாக தயாரித்து நாளை (அதாவது இன்று) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக விஜயகுமார் எம்.பி. கூறியதாவது:-

விமான நிலையம் அமைய உள்ள இடத்தின் வரைபடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் தயாரித்துள்ளனர். அதை என்னிடம் காண்பித்தனர். அதில் சிறு, சிறு குறைபாடுகள் இருந்ததை நிவர்த்தி செய்து, புதிய வரைபடத்தை தயாரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளேன்.

அந்த வரைபடத்தை நான் டெல்லி கொண்டு சென்று விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகளிடம் காண்பித்து, விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை விரைவு படுத்த இருக்கிறேன். குமரி மாவட்டத்தில் வெகு விரைவில் விமான நிலையம் அமையும். குமரி மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான இந்த திட்டத்தை எப்படியும் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் தோவாளை அருகே பண்டாரபுரத்தில் நடந்த நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

பின்னர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டு, அதற்கு மத்திய அரசு அனுமதி பெறுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர், அ.தி.மு.க. நிர்வாகிகள் சகாயம், கனகராஜன், சந்தோஷ், ஜான்சன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்