நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

குத்தாலம் அருகே சம்பள நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-15 22:30 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கடந்த பல மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் முழுமையாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) டெல்லிபாபு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

மேலும் செய்திகள்