மேட்டூர் காவிரி ஆற்றில் 560 விநாயகர் சிலைகள் கரைப்பு

மேட்டூர் காவிரி ஆற்றில் நேற்று 560 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Update: 2018-09-15 22:45 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வந்து, மேட்டூர் காவிரி பாலம் அருகில் காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது. நேற்று இங்கு 560 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதே போல தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 59 விநாயகர் சிலைகளும், நேற்று 84 சிலைகளும் கரைக்கப்பட்டன. இதையொட்டி ஏராளமான இளைஞர்கள் தேவூர் பகுதிக்கு வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் முகத்தில் கலர் பொடிகளை தூவியும், ஆடிப்பாடியும் வந்தனர். இதன் காரணமாக தேவூர் அருகே கொட்டாயூர் பகுதியில் இருந்து கல்வடங்கம் காவிரி கரை வரை 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, ஆத்தூர், ஓமலூர், தாரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் கொண்டு வந்து கரைக்கப்படுகிறது.

ஆட்டையாம்பட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக ஆற்றில் கரைக்க கொண்டு சென்றனர். 100-க்கும் மேற்பட்ட சிலைகளை வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. 3 அடி முதல் 15 அடி உயரம் வரை உள்ள சிலைகளை கொண்டு சென்று, ஜேடர்பாளையம், கல்வடங்கம், பவானி ஆகிய இடங்களில் ஓடும் ஆறுகளில் கரைத்தனர்.

எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. கடந்த 13-ந் தேதி 50-க்கும் மேற்பட்ட சிலைகளும், நேற்று முன்தினம் 102 சிலைகளும், நேற்று 183 சிலைகளும் கரைக்கப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஏற்காடு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில் 6 விநாயகர் சிலைகள் நேற்று படகு இல்ல ஏரியில் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலைகளை கொட்டும் மழையில் ஊர்வலமாக கொண்டு வந்து கரைத்தனர். மேலும் வாழப்பாடி மற்றும் பேளூர், குறிச்சி பகுதிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புழுதிகுட்டை ஆணைமடுவு நீர்தேக்கத்தில் கரைக்கப்பட்டன. மொத்தம் 52 விநாயகர் சிலைகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி பகுதிகளில் மொத்தம் 151 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று ஓமலூர் சிக்கனம்பட்டி, காடையாம்பட்டி பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று, டேனிஷ்பேட்டை அடிவாரத்தில் உள்ள மேற்கு சரபங்கா ஆற்றில் கரைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்