ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னர் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது தவறு அல்ல இல.கணேசன் பேட்டி

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னர் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது தவறு அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-15 23:25 GMT
தூத்துக்குடி, 

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னர் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது தவறு அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம் 

தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய், கண் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை நடந்தது.

முன்னதாக இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது;–

தவறு அல்ல 

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னர், மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது தவறு அல்ல. அவர் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கின்ற காரணத்தால் இதில் ஏதும் சட்ட சிக்கல் உள்ளதா? என்பதை அறிய மத்திய அரசிடம் கலந்து ஆலோசிப்பார். மத்திய அரசு தனது ஆலோசனையை அவருக்கு வழங்கும். அதன் பின்னர் தனது முடிவை அறிவிப்பார்.

இந்திய நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பதில் தேசத்தின் மீது அக்கறை இல்லாமல் ராகுல்காந்தி பேசி வருகிறார். உங்கள் ஆட்சி காலம் வேறு. தினமும் ஊழல் குற்றச்சாட்டு நிறைந்த ஆட்சி உங்கள் ஆட்சி. ஆனால் நரேந்திர மோடியின் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி என்பதை ராகுல்காந்தி, திருநாவுக்கரசர் புரிந்து கொள்ள வேண்டும்.

மத ஊர்வலம் 

தமிழ்நாட்டில் மதசார்பற்ற முறையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு மதத்துக்கும் திருவிழாக்கள் உள்ளன. இந்துக்கள் ஊர்வலமாக பொது தெருவில் போகும் போது தடுக்கின்ற முயற்சியில் சிலர் ஈடுபட்டால், வரும் காலங்களில் எந்த மதத்துக்காரர்களும் ஊர்வலம் செல்ல அமைதி இல்லாமல் போய்விடும். செங்கோட்டையில் நடந்த சம்பவம் குறித்து எந்த ஒரு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. காரணம் பாதிக்கப்பட்டவன் இந்து. இதில் இருந்தே இந்த அரசியல் கட்சிக்காரர்களின் போலி மதசார்பற்ற தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்