பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி ஓட,ஓட விரட்டி படுகொலை

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஓட,ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். உயிருக்கு பயந்து வீட்டுக்குள் ஒளிந்தவரை மர்ம கும்பல் கதவை உடைத்து உள்ளே புகுந்து வெட்டி சாய்த்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-09-17 21:30 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் அருகேயுள்ள பொன்மாந்துரையை சேர்ந்தவர் ரபேல். இவருடைய மகன் பாஸ்கர் (வயது 36). இவர் மீது 2 கொலைகள், வழிப்பறி, கொலை முயற்சி என 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் பாஸ்கரின் பெயர் உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு பாஸ்கர், மோட்டார்சைக்கிளில் திண்டுக்கல் தோமையார்புரத்துக்கு நான்கு வழிச்சாலை வழியாக வந்துள்ளார். அங்கு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு, ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் 2 மோட்டார்சைக்கிள்கள் வேகமாக வந்து நின்றன.
அந்த மோட்டார்சைக்கிள்களில் இருந்து 5 பேர் கையில் அரிவாள்களுடன் இறங்கினர். ஏதோ விபரீதம் நடக்க இருப்பதை உணர்ந்த பாஸ்கர், சுதாரிப்பதற்குள் ஒருவன் அவருடைய பின்தலையில் வெட்டினான். உடனே பாஸ்கர் மோட்டார்சைக்கிளை எடுத்து கொண்டு தப்ப முயன்றார்.

இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள், பாஸ்கரின் கை, கால்களில் சரமாரியாக வெட்டினர். உடனே அவர், மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு அங்கிருந்து சாலையின் குறுக்காக ஓடினார். சாலையில் வேகமாக வந்த வாகனங்களுக்கு நடுவே புகுந்து சாலையின் மறுபக்கம் சென்றார்.

கொலைகார கும்பலிடம் இருந்து உயிரை காப்பாற்ற பாஸ்கர் தலைதெறிக்க ஓடினார். எனினும், அந்த கும்பல் ரத்தம் சொட்டசொட்ட அரிவாள்களுடன் விடாமல் துரத்தி சென்றது. அதை பார்த்ததும் அருகில் உள்ள டீக்கடையில் நின்றவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.

இதற்கிடையே உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய பாஸ்கர், சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டில் கதவு திறந்து கிடப்பதை பார்த்தார். உடனே அந்த வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டினார். ஆனால், வீட்டை சூழ்ந்த அந்த கும்பல் கதவை உடைத்தது. பின்னர் உள்ளே புகுந்த அந்த கும்பல், பாஸ்கரை தேடியது.

அங்கு பாஸ்கர், அந்த வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருப்பதை கண்ட அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கேயே அவரை சரமாரியாக வெட்டினர். பாஸ்கர் உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக அவருடைய தலையை குறிவைத்தே வெட்டினர். இதனால் பாஸ்கருக்கு தலையின் பின்பகுதி சிதைந்து விட்டது. மேலும் உடல் முழுவதும் பலத்த வெட்டு விழுந்தது.

இதனால் பாஸ்கர், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பாஸ்கரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரவுடியை ஓட,ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்